உலகில் மக்கள் எதிர்நோக்கும்
உண்மை வாழ்வு கிடைப்பதில்லை!
நலத்தைக் கெடுக்கும் கொடுங்கொடுமை
நாளும் துன்பம் கொடுக்கிறது!
சலங்கை போன்ற சிரிப்பெல்லாம்
சற்றுங் காண முடிவதில்லை!
நிலத்தின் தன்மை குறைகிறதே
நெஞ்சில் இல்லை நிம்மதியே!
நாடும் நாடும் போர்செய்து
நாளும் பகைமை வளர்க்கிறது
வேடர் போன்று கொலைத்தொழிலை
வேகங் கொண்டு புரிகின்றார்!
காடு மலையை அழித்தின்று
கான லாக்கி மகிழ்கின்றார்!
தேடு கின்றோம் அமைதியினைத்
திசைகள் எங்கும் போர்க்குரலே!
அன்பாய்ப் பழகி வாழ்ந்திட்டால்
அமைதி தானே வந்திடுமே
சின்ன சின்ன பொறுமையினால்
சிறந்த வாழ்வை அமைத்திடலாம்!
எண்ணம் நன்றே இருந்திட்டால்
என்றும் மகிழ்வு நிலைத்திடுமே!
பொன்னாய் முன்னோர் படைத்திட்ட
பூமி வளத்தைக் காப்போமே!
________________