இதயம் தொட்ட உணர்வினையே
இசைத்துக் காதல் என்கின்றோம்!
உதயம் ஆகும் நற்குணங்கள்
உயரம் தொடவே வைத்திடுமாம்!
மிதமாம் கருவம் கடந்திட்டால்
மிகையாய் வாழ்க்கை இனித்திடுமே!
நிதமும் பெரியோர் ஆசிகளை
நீண்டு வாழப் பெற்றிடுவோம்!
(236)
மண்ணில் உறவு பெரிதெனவே
மனத்தை அங்கே செலுத்திடுவோம்!
கண்ணின் மணியாம் பிள்ளைகளைக்
கவலை இன்றிக் காத்திடுவோம்!
எண்ணம் உதிக்கும் நல்வழியை
எடுத்துக் காட்டி வழிசொல்வோம்!!
உண்மை வாழ்வின் உயிரென்றே
ஓதி யுயர்வை அளித்திடுவோம்!
(237)
அன்பின் பிணைப்பால் இல்லமதில்
ஆறாய் ஓடும் மகிழ்வெள்ளம்!
காண்போம் நாமும் இல்வாழ்வில்
கனிந்த நல்ல காதலதை!
பண்பாய்ப் பெற்றோர் நடந்திட்டால்
பார்த்துக் குழந்தை வளர்ந்திடுமே!
எண்ணம் இனிக்கும் புகழ்வாழ்வை
ஏற்றே வாழ வாழ்த்துகிறேன்!
(238)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection