கனவில் கூடக் குழந்தையினைக்
கண்ணின் மணியாய்க் காத்திடுவாள்!
மனத்தில் இன்பம் பொங்கிடவே
மார்பில் தாங்கி மகிழ்ந்திடுவாள்!
தினமும் விதமாய் உடையிட்டுத்
தேவா என்றே கொஞ்சிடுவாள்!
தனமோ இல்லாக் காலத்தும்
தன்னைத் தந்து வளர்த்திடுவாள்!
உடலின் வலியை தாங்கியவள்
உயிரைக் கொடுத்துப் பெற்றெடுப்பாள்!
கடலாய்த் துன்பம் வந்தாலும்
கலங்கா துள்ளம் சிலிர்த்திடுவாள்!
திடமாய் நாளும் உருக்கண்டு
சிரிக்கும் அழகில் மயங்கிடுவாள்!
தடமே காட்டித் தன்மகவைத்
தழைக்கச் செய்து காத்திடுவாள்!
கள்ள மில்லா மழலையினைக்
கன்னங் கொஞ்சி ஆசைதீர்ப்பாள்!
அள்ளக் குறையா அன்பினாலே
அருமைத் தமிழால் கதைசொல்வாள்!
பள்ளி செல்லும் பாதையினைப்
பார்த்துப் பார்த்துக் காத்திருப்பாள்!
இல்லம் செழிக்க வந்தபிள்ளை
இனிதாய் வாழ வழிசமைப்பாள்!