எண்ண வியலாக் கருக்கொண்டு
எழுதும் கவிகள் அற்புதமாம்!
வண்ண வழகாம் தோற்றத்தை
வடித்துப் படித்தால் பேரின்பம்!
விண்ணின் எழிலோ கொள்ளையிட
விரைந்து பாடல் குவிந்திடுமே!
மண்ணின் மாட்சி சொல்லிடவே
மனமே துள்ளி ஆடிடுமே!
சிந்தை விண்ணில் பறந்தேகிச்
சீராய்ச் சீர்கள் அடுக்கிவரும்!
எந்தை முருகன் நினைவினிலே
எண்ணில் அடங்கா பாமலரும்
சிந்தும் தேன்போல் அருஞ்சொற்கள்
சிகரம் தொடவே வழிகாட்டும்!!
பந்தம் பாசம் எல்லாமே
பாடும் உணர்வைத் தட்டிவிடும்!
பெண்ணின் அங்க அசைவுகளோ
பெரிதாய்க் கவியைத் தூண்டிடுமே!
கண்ணைக் கவரும் எழில்யாவும்
காட்சி யாக உள்பதியும்!
எண்ணம் நீந்திப் பறந்திடுமே!
இசையை மீட்டிக் களித்திடுமே!
ஒன்றாய்ச் சேர்ந்து சுவையாவும்
உருவம் ஆகிப் பிறந்திடுமே!
________________