வல்ல காட்டில் பல்லுயிர்கள்
வளமாய் வாழும் இயற்கையுடன்!
மெல்ல இசையும் தவழ்ந்துவரும்!
மென்மைக் குரலில் புள்பாடும்!
கொல்லும் மிருகம் பற்பலவும்
கூட்ட மாகச் சுற்றிவரும்!
நல்ல செழிப்புச் செல்வத்தை
நன்றே வழங்கி நமைக்காக்கும்!
இயல்பாய் அருவி பாய்ந்திடுமே
இதனால் அழகும் கூடிடுமே!
மயக்கும் வாசம் வீசிடுமே!
மனத்தில் இனிமை ஊட்டிடுமே!
இயற்கை பெருக்கும் அடவியுமே
ஈங்கு எம்மைக் காத்திடுமே!
கயவர் ஆகி மனிதர்கள்
காட்டை யழித்து வாழ்கின்றார்!
மயக்கம் கொண்டு மரம்வெட்டி
மனிதர் பெருமை கெடுத்தாரே!
பயனுள் வளங்கள் மாண்டனவே
பசுமை இன்றிப் போனதுவே
இயற்கை சீற்றம் கண்டபோதும்
இன்னல் எண்ணி மாறாரே!
வியப்பாம் மக்கள் வாழ்வுமுறை
வீணாய் அழிவை நாடுகிறார்!
________________