முருகா உன்றன் பாதம்
முகமே பதித்து வேண்டுகின்றேன்!
அருவாய் உருவாய் என்றும்
அருளி என்னை ஆட்கொள்வாய்!
தருவாய் பாடல் நிறைவாய்
தகைமை மின்ன எழுதிடவே!
கருத்தாய் வந்து கருணைக்
கடலே! கண்ணைத் திறவாயே!
⁂
பல்லோர் வணங்கும் கந்தா!
பசுமை வீசும் வேலவனே!
நல்லோர் நெறியைக் காட்டி
நன்மை யாவும் தருவாயே!
வல்ல திறனை யூட்டி
வளமே காணச் செய்வாயே!
வெல்லும் வழிகள் காட்டி
வியக்கும் வாழ்வை யருள்வாயே!
⁂
அன்னை தந்தை என்றே
அன்பாம் இருவர் நீயானாய்!
முன்னைப் பிறப்பின் வினையை
முற்றும் அகற்றித் துணையானாய்!!
கன்னல் தமிழின் முதல்வா!
காப்பாய் மொழியை வளம்பெறவே!
வண்ண அழகா! அமுதா!
மணக்கும் கவிகள் தருவாயே!
⁂
________________
க
உங்கள் கருத்து
Your Reflection