பள்ளிக் காலம் உயர்காலம்
படிப்பில் சிந்தை பதித்திட்டோம்!
அள்ளக் குறையா நற்றிறனை
அங்கே தானே பெற்றிட்டோம்!
துள்ளிக் குதித்தே ஆடியதைத்
தொலையா நினைவாய்க் கொண்டிட்டோம்!
கள்ளம் இல்லா நட்புயர்வு
கண்டு நன்றே களித்திட்டோம்!
அடிகள் வாங்கி நொந்ததெலாம்
அகத்தில் என்றும் மறவோமே!
படிகள் கடந்து பாய்ந்ததெலாம்
பக்கம் பலவும் எழுதிடலாம்!
எடியே என்று கூப்பிட்டால்
எதிர்த்துக் கேட்கா நண்பியுண்டு!
நொடியில் கணக்கு விடைகேட்டு
நோகக் குட்டு வாங்கிடுவோம்!
பரீட்சைக் காகக் கண்விழித்துப்
பாடம் செய்த நற்காலம்!
உரிய நேரம் மறந்துவிட்டு
உடலும் நடுங்க முழித்தோமே!
அரிய நல்ல செயல்களுமே
அங்கே தானே செய்தோமே!
அறிவு கிடைத்த ஆலயத்தை
ஆயுள் முழுதும் மறவோமே!
________________