மண்ணைப் போற்றி மாண்புடனே
மகிழ்ந்து பயிர்கள் நட்டிடுவோம்!
விண்ணில் இருந்து மழைபெறவே
மேலும் மரங்கள் வளர்த்திடுவோம்!
கண்ணே யென்று பாதுகாத்துக்
காலம் கனியக் காத்திருப்போம்
முன்னோர் செய்த விவசாயம்
முயன்று காத்து நலம்பெறுவோம்!
(257)
நிலத்தை நன்றே பண்படுத்தி
நீரே பாய வழிசெய்வோம்!
பலரும் போற்றும் வகையினிலே
பாடு பட்டே உழைத்திடுவோம்!
மலரும் காலம் எனநம்பி
வளமாய்த் திட்டம் வகுத்திடுவோம்!
நலமாய்ப் பலரும் உயிர்வாழ
நல்ல உணவை யளித்திடுவோம்!
(258)
உழவுத் தொழிலே உயர்ந்ததென
உலக்குக் கென்றும் உரைத்திடுவோம்!!
இழப்பே இன்றிப் பயிர்துலங்க
இறைவன் துணையை வேண்டிடுவோம்!
அழகாம் உலக இயற்கையினை
ஆழ்ந்து நாமும் சுவைத்திடுவோம்!
இழந்த எங்கள் வாழ்க்கையினை
இனிதே மீட்டு புகழ்பெறுவோம்!
(259)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection