அன்னைத் தமிழை மனமேற்றி
அமுதக் கவிகள் பாடிடுவோம்!
என்றும் அதனை உயிராக
ஏந்தி நாளும் காத்திடுவோம்!
இன்பம் நிறைவாய்ப் பெருகட்டும்
எங்கும் பொலிந்து பரவட்டும்!
பண்பும் அன்பும் சிறக்கட்டும்
பாரோர் மகிழ்ந்து வாழட்டும்!
மண்ணில் கன்னல் சுரக்கட்டும்
மாட்சி யெங்கும் மலரட்டும்!
விண்ணும் வாழ்த்துப் பொழியட்டும்!!
வீசும் தென்றல் இசைக்கட்டும்!
எண்ணும் போதே இனிக்கட்டும்
எங்கள் இனமே சுவைக்கட்டும்!
பண்கள் பாட அருளட்டும்
பாகாய் உருகிப் பொங்கட்டும்!
கன்னல் தமிழே! கனிந்தவளே!
கமழும் மணமாய் வீசுகிறாய்!
மின்னல் போலே ஒளிர்பவளே
மீண்டும் மீண்டும் தழைப்பவளே!
என்றும் எளிமை இன்சொல்லால்
இன்பம் சூட்டும் பொன்மகளே!
என்னை இயக்கும் முதன்மொழியே
என்றும் ஓங்கி வாழியவே!
________________