செய்துவிட்ட தவறொன்று சிறிதே என்று
தெளிவடைய முயல்வதுவோ நல்ல தன்று!
உய்யவழி வேண்டுமானால் உணர்வாய் உன்னை
உரியவழி கண்டுநீயும் திருந்தி வாழ்க!
மெய்மையென வாழ்வதுவும் ஒளிர வேண்டும்
மேன்மைகொண்டே உன்புகழும் ஓங்க வேண்டும்!
எய்திடுவாய் வெற்றிதனை நேர்மை கொண்டே!
ஏறிடுவாய் படிகளிலே ஏற்றங் கொண்டே!
அறியாது தப்பதனைச் செய்த போதும்
அறிவிழந்து சரியதென வெண்ணி டாதே!
தறிகெட்டே உன்வாழ்வு சென்றி டாது
தரமெனவே மன்னிப்பைக் கேட்டு வாழ்வாய்!
நெறியோடு நல்லெண்ணம் வளர்த்து நீயும்
நேர்மையாய்ப் பிறர்போற்ற உயர்ந்தே உய்வாய்!
தறிகெட்டோர்க் குதவுவதால் அவரின் போக்குத்
தப்பைவிட்டு நேர்வழியில் செல்லல் காண்பாய்!
கலகமதைத் தம்தொழிலாய்ச் செய்வார் உண்டு
கணக்கிலாத மக்கள்தம் காழ்ப்பைக் காண்பார்!
நிலமதிலே நிம்மதியைப் பெறவே மக்கள்
நித்தமுமே போராட்ட வாழ்வைக் கொண்டார்!
பலமிழ்ந்து போகையிலே பிழையை எண்ணிப்
பரிதவித்தே அழுவதனால் பயனும் இல்லை!
உலகினிலே மனிதவாழ்வு நிலையாய் இல்லை
உண்மையோடு வாழ்பவரே உயர்ந்து நிற்பார்!
________________