அழிந்ததே ஊரும் ஆழியால் அன்றே
அவதியுற் றெம்மவர் அழுதார்!
பழியினை யறியாப் பாவியாம் இவர்கள்
பருதவித் தேதினம் துடித்தார்!
வழியினை யறியா மக்களாய் ஓடி
வாழ்வினைத் தொலைத்தவர் ஆனார்!
இழிவினை ஏற்றே இன்னலைப் பட்டே
இசைவிலா உணவினை உண்டார்!
(477)
அலையெனக் கடலும் ஆர்ப்பரித் ததுவே
அளவிலார் உயிரினை நீத்தார்!
மலையென மக்கள் உடமைகள் நீரில்
மறைந்ததைப் பார்த்தவர் திகைத்தார்!
நிலையிலா வுலகம் இதுவெனப் பலரும்
நிம்மதி இழந்தவர் ஆனார்!
தொலைந்ததே எல்லாம் புலம்பியே மக்கள்
துயரதால் வாடினர் பார்த்து!
(478)
ஆண்டுகள் பலவும் கடந்துமே இங்கே
ஆழியின் பேரலை மறவோம்!
தாண்டியே பதினொன் றாண்டுகள் கடந்தும்
தாங்கொணா நினைவுகள் மனத்தில்!
மீண்டுமோர் தடவை அழிவினைத் தாங்கும்
வேதனை எமக்கினி வேண்டாம்!
மாண்டவர் நிலையை மறக்கவே முடியா
மாபெரும் கவலையில் உலகே!
(479)
________________