அருளினைத் தரவே ஆண்டவன் மறந்தான்
அனுதினம் வணங்கினேன் நானும்!
இருளினைச் சூழ்ந்த இன்றைய பொழுது
இயம்புதே சோகமாய் எதையோ!
மருண்டிடும் நினைவும் மாயமாய் வருதே
மனத்தினில் நினைத்திலேன் இதனை!
பொருளினை அழித்த மனிதனாய் இன்று
பொறுப்பிலா ஆண்டியாய் ஆனேன்!
(471)
உயிரென வுயரப் பிள்ளையை வளர்த்து
உன்னத நிலையினைக் கொடுத்தேன்!
பயிரென நீரும் ஊற்றியே வளர்த்தும்
பசுமையை முற்றிலும் மறந்தான்!
கயிறினைத் திரித்துப் புண்ணெனக் கரங்கள்
காலமும் கடந்துமே நொந்தேன்!
மயிரென உறவும் உதிர்ந்துதான் விழும்
மடையனாய் உணர்ந்திட மறந்தேன்!
(472)
நெருப்பினுள் இருக்கும் நாள்களாய் என்றன்
நெஞ்சமும் நொந்திட அழுதேன்!
உருவமும் மாறி உணர்வுமே மாறி
உலகினில் துடிப்பிலா வாழ்வாய்!
கருவமாய்க் குதித்த பருவமும் உண்டு
கலைந்தவோர் கனவென நினைவு!
அடக்கிநான் வாழ்ந்த காலமும் ஓட
அடங்கியே வாடுறேன் நாளும்!
(473)
________________