இன்பம் துன்பம் மாறிவரும்
இயல்பாய் இதுவே வாழ்வென்போம்!
அன்பை யூட்டி மகிழ்ந்தாலும்
அங்கே கண்ணீர் வருகிறதே!
பண்பாய் உலகில் வாழ்ந்தாலும்
பாடாய்ப் படுத்தும் துயருண்டாம்!
எண்ணிப் பணத்தைச் சேர்த்தாலும்
எல்லாம் இழந்து நிற்பதுமேன்?!
விலகி விலகிப் போனாலும்
வெருட்டி வருமே வேதனைகள்!
கலங்க வைத்து நமைச்சாய்த்துக்
களிக்கும் விதியை என்னென்பேன்?
நிலவும் கதிரும் வருவனபோல்
நித்தம் வாழ்வு மாறுவதேன்?
அலறித் துடித்த மனிதருக்கும்
அடுத்து மகிழ்வு கிடைப்பதுமேன்?!
தகமைப் பட்டம் பெற்றவரும்
தலையின் விதியாய் அலைவதுமேன்?
பகலும் இரவும் உழைத்தவரும்
பசுமை இன்றிக் கலங்குவதேன்?
நிகழும் ஆண்டு கழியட்டும்
நெஞ்சச் சுமைகள் கழியட்டும்!
பகர்வோம் ஈசன் திருப்பெயரைப்
பணிந்தே தொழுவோம் முடிவிலையே!
________________