பிறரைப் புரிந்து வாழாமல்
பெரிதும் தன்னை உயர்வென்பார்!
இறவா வரமே பெற்றவர்போல்
இகழ்ந்தே பிறரை மகிழ்ந்திடுவார்!
உறவை வெறுப்பர் இக்குணத்தால்
உயர்வும் நிலையா தென்றுணரார்!
மறந்தும் அகந்தை கூடாதே
மனித இனத்தின் கேடிதுவே!
(222)
தன்னைப் போற்றும் செயலாகத்
தாமே பெருமை கொண்டிடுவார்!
வன்மை கொண்ட இவர்களுக்கு
வாழ்வில் அமைதி கிடைக்காதே!
உண்மை நண்பர் விலகிடுவார்
உயர்வு நீங்கித் தாழ்ந்திடுவார்!
என்றும் சமமாய் இருந்திட்டால்
எங்கும் வாழ்த்துக் கிடைத்திடுமே!
(223)
இல்லா தேதோ இருப்பதென
எண்ணி வானில் பறந்திடுவார்!
பொல்லா வெண்ணம் கொண்டலைந்து
போதை யேறிப் பேசிடுவார்!
நல்லோர் வல்லோர் எல்லோரும்
நலிந்தார் என்றே நினைத்திடுவர்!
அல்லல் நிறைந்த நெஞ்சத்தார்
அழிவார் என்ப தறியாரே!
(224)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection