குடும்பமது சேர்ந்தொன்றாய் வாழ்ந்த போது
குதூகலமே நாளுமெனக் கழிந்த துண்மை!
கடுக்கதியாய்க் காலமுமே கடந்து செல்லக்
கனமான சூழலாகத் தனித்த வாழ்வு!
நடுவிரவாய் இருண்டுவிட்ட காலம் தன்னில்
நம்மனத்தைத் துன்பமுமே வாட்ட நொந்தோம்!
சடுதியாக வொருநாளில் கேட்ட செய்தி
சாந்தமதைத் தந்திடவே துள்ளி வந்தோம்!
(497)
பேத்தியவள் பிறந்துவிட்ட தகவல் ஒன்று
பேரின்பப் பெருங்கடலில் ஆழ்த்தி யெம்மை!
சாத்தியது துன்பமதன் கதவை நன்றாய்
சாதனையைச் செய்ததுபோல் பெருமை பெற்றோம்!
காத்திருப்போம் அவள்வருகை எண்ணி நாளும்
கண்டவுடன் இன்பமது ஊற்றாய்ப் பாயும்!
பூத்திடுமே உள்ளங்கள் மழலைச் சொல்லால்
புதுவாழ்வு இதுவெனவே எண்ணத் தோன்றும்!
(498)
கலகலப்புச் சிரிப்பதனைக் கேட்டு நாமும்
கசிந்துருகிக் குழந்தையாக மாறி நிற்போம்!
நிலத்தினிலே தவழ்ந்துவந்து முதுகில் ஏறி
நில்லாது தவழெனவே சிரிப்பாள் நன்றே!
பலமதையே பெற்றதுபோல் நோய்கள் எல்லாம்
பறந்திடவே மகிழ்ச்சிவெள்ளம் பாயக் காண்போம்!
உலகினிலே குழந்தைகளே உற்ற செல்வம்
உயர்வாயே வளர்ந்துவரக் கருத்தாய்க் காப்போம்!
(499)
________________