அன்பென்னும் அணிகலனைப் பூண்டே நாமும்
அரவணைத்தே அயலவரில் நட்புக் கொள்வோம்!
துன்பமென்னும் சேற்றையென்றும் பூச வேண்டாம்
துணிவென்னும் ஆயுதத்தை மனத்தில் ஏற்போம்!
பண்புடனே வாழ்வுதனை ஓட்டிச் செல்வோம்
பாசமென்னும் தூயகுணம் கொண்டே வெல்வோம்!
வன்பகையைக் கொண்டோர்முன் அமைதி காப்போம்
வளர்ந்துவரும் இளையவர்க்குப் புரிய வைப்போம்!
(488)
ஈகையென்னும் நற்பண்பை மனத்தில் கொண்டு
இல்லையென்போர்க் குதவிதனை விரும்பிச் செய்வோம்!
தோகைதனை விரித்தாடும் மயிலா யென்றும்!
தோற்றத்தில் அழகுதனை மனமே காட்டும்!
வாகைசூடி நல்லவராய் நடிப்பர் கெட்டோர்
வாய்மையொன்றே பேசுவதாய்ப் பொய்யும் சொல்வார்!
ஆகையினால் யாரையுமே நம்ப வேண்டாம்
அறவழியில் அமைதியுடன் கவனம் கொள்வோம்!
(489)
ஆண்டவனைத் தினந்தோறும் வணங்கி நிற்போம்
அவனேதான் நமக்குதவி நம்பி வாழ்வோம்!
மாண்டவரைத் தினமெண்ணி வருந்த வேண்டாம்
மனம்வருந்தல் கண்டுமவர் திரும்ப மாட்டார்!
ஏண்டாப்பாய் வாழ்ந்திடலை நிறுத்தி நாமும்
இயன்றவரை யுள்ளுணர்வில் உண்மை காண்போம்!
வானம்போல் விரிந்திட்ட உள்ளம் கொண்டு
வசந்தமென மனத்தினிலே அமைதி காப்போம்!
(490)
________________