வாழ்வில் இன்பம் நிறைபருவம்
வண்ணம் மிகுந்த எழில்இளமை!
தாழ்வில் பசுமை நினைவுகளும்
தகைமை பெருக்கும் மாண்புகளும்
ஆழ்ந்த உள்ளச் சிந்தனையும்
ஆசை அலையும் மேவிவரும்!
வாழ்வைச் சுவைக்கும் காலமது
வசந்தம் வானில் பறந்தோமே!!
(213)
எண்ணில் நிறைந்த நண்பர்கள்
எதற்கும் பயமில் நாள்களவை!
விண்ணின் அளவுத் திட்டங்கள்
விரிந்து வருமே எப்பொழுதும்
எண்ணம் எல்லாம் சுற்றிவரும்
இனிமை பொங்கும் கனவிருக்கும்!
வண்ண நிலவின் அழகெல்லாம்
வரைதல் செய்யும் மனத்தினிலே!
(214)
துள்ளிக் குதித்தே ஆட்டமிடும்
துன்பம் தெரியாக் காலமது!
கள்ள மில்லா வுள்ளத்தில்
காதல் கூடக் குடியேறும்!
பள்ளம் மேடு புரியாது
பார்வை தீதை நாடிவிடும்
உள்ளம் நன்றே சிந்தித்தால்
உயரம் தொடலாம் நம்புங்கள்!
(215)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection