உழைத்திடும் கைகள் உயர்வினைக் காணும்!
ஒப்பிலா வாழ்வினைப் பூணும்!
வளைந்திடும் உடலில் வேர்வையும் சிந்த
வளமுடன் உயிர்நலம் பெறலாம்!
உழைப்பதே நாட்டின் உயர்வருள் சொத்தாம்
உழவுதான் உலகினில் மூச்சு!
மழையினை நம்பி விதைத்தவன் நாளும்
மனத்தினால் போற்றுவான் இறையை!
(483)
விண்ணினில் இருந்து மழையையும் பெறவே
விரைந்துநாம் மரங்களை நடுவோம்!
முன்னவர் செய்த பயிர்களை நாமும்
முயற்சியால் முயன்றுநாம் காப்போம்!
கண்ணென நாளும் பயிர்களைக் வளர்த்துக்
கடமையாய்க் காவலும் செய்வோம்!
இன்னலைப் போக்க இயற்கையைக் காத்தே
இன்பமாய் உலகினில் வாழ்வோம்!
(484)
கமத்தொழிற் சிறப்பைப் புவியிலே சொல்வோம்
கருத்துடன் கற்றிட வைப்போம்!
தமக்கென மக்கள் வீட்டினில் தோட்டம்
தழைத்திடும் வண்ணமே வேண்டும்!
சமமெனத் தொழிலைச் சளைத்திடா தாற்றித்
தரணியின் குறைகளைத் தீர்ப்போம்!
இமயமாய் உலகில் வெற்றியைக் கண்டே
என்றுமே ஏற்றமாய் வாழ்வோம்!
(485)
________________