வண்ணமாம் தமிழின் வான்புகழ் வேந்தே!
வள்ளலாய் ஆற்றலைத் தந்தாய்!
எண்ணமே நிறைந்த எழிற்றமிழ் அரசே!
ஏற்றமே பெற்றிட வைத்தாய்!
கண்ணெனக் கற்றே கனித்தமிழ் மொழியை
கருணையாய் எமக்குமே ஈய்ந்தாய்!
மண்ணிலே பிறந்த மகிமையைப் பெற்றாய்!
மகிழ்ந்துபல் லாண்டுகள் வாழ்க!
முற்றுமே தமிழாய் முதுமொழி பூண்டு
முயற்சியே திருவினை யென்றாய்!
பற்றுடன் கற்கப் பலவழி சொல்லிப்
பயிற்றிய பயிற்சியால் உயர்ந்தோம்!
வெற்றியே வாழ்வின் இலட்சிய மென்றே
வேகமா யுழைப்பிலே உயர்ந்தோம்!
பற்றினைக் கொண்டோம் பாடலின் அரசே!
படர்புகழ் ஆண்டுகள் வாழ்க!
இன்னிசைப் பாக்கள் எழுதவே வைத்தே
இலக்கணம் சொல்லியே தந்தாய்!
மின்னிடும் அழகைக் கவிதையில் காட்ட
மெல்லவே நுட்பமே சொன்னாய்!
பன்னிரு மடங்காய் ஒளிர்ந்திடும் பாடல்
பார்ப்பவர் கண்களை ஈர்க்கும்!
பன்முகத் திறமை பாரினில் உற்றாய்
பண்ணிசை யரசனே வாழ்க!
________________