புதியவோர் விடியல் புதியதாம் ஆண்டில்
புவியினில் மாற்றமே காட்டும்!
உதித்திடும் பரிதி நல்லொளி வீசி
உயர்வினைத் தந்திடும் என்றும்!
மதியினைத் தீட்டி உழைப்பினில் கவனம்
மகிழ்வுடன் வைத்திடல் வேண்டும்!
அதிகமாய்க் கவனம் உடலினில் கொண்டே
அபத்தமாம் தொற்றினை ஒளிப்போம்!
வருடமும் புதிதாய்ப் பிறந்திட விங்கே
வசந்தமும் வீசுதே மனதினில்!
அருள்பெற யாவரும் ஆலயம் சென்றே
ஆசிகள் பெற்றதால் மலர்ந்தார்!
இருளது மறைந்து வாழ்வது மிளிரும்
என்றவர் நம்பினர் திடமாய்!
பொருட்களும் நிறைந்து பொன்னென வாழ்வும்
புரிதலாய் நிறையுமே உள்ளம்!
புத்தொளி வீசப் புதுமைகள் நடக்கப்
புத்துணர் வேற்றியே மகிழ்வோம்!
எத்திசை யெங்கும் இயல்பெனப் பரவ
இத்தரைத் துன்பமும் விலகும்!
சத்தியம் நேர்மை நியாயமும் நிலைக்கச்
சங்கடம் தீரவே வாழ்வோம்!
முத்தெனத் தமிழும் முதன்மையைப் பெறவே
மூச்சென எம்மொழி கொள்வோம்!
________________