இருண்டதாம் வாழ்க்கை ஒளியினைப் பெறவே
இனியதோர் புன்னகை வேண்டும்!
இருந்திடும் இடமும் இதத்துடன் இருக்க
இனிமையாய் நாளுமே வாழ்வோம்!
மருந்தினைப் போல உயிரினைக் காக்கும்
மகத்துவ உணர்வுதான் இதுவாம்!
வருந்தியே நோவோர் மனநிலை போக்க
மகிழ்வருள் புன்னகை பூப்போம்!
(468)
மகளிரின் அழகும் கூடிட இங்கே
மலர்வினால் மட்டுமே முடியும்!
இகழ்வையே செய்யும் மனிதரும் கூட
இனிமையில் நகைப்பினைச் செய்வர்!
அகத்தது தூய்மை முகத்தினில் தெரிய
அழகினைச் சிறுநகை காட்டும்!
உகந்ததாம் நேரம் மெல்லென மூரல்
உள்ளகக் கவலையைப் போக்கும்!
(469)
கண்ணினில் காணும் காட்சிகள் பலவும்
கருத்தினில் மகிழ்வினைத் தருமே!
எண்ணமே நன்றாய் என்றுமே இருந்தால்
இதயமும் புரிதலில் பூக்கும்!
எண்ணிய தெல்லாம் இனிமையாய் நடந்தால்
ஏற்றமே மனத்தினில் விரியும்!
புன்னகை பூத்தே பூமியில் என்றும்
புதியதாய் வாழ்வினைப் படைப்போம்!
(470)
________________